Monday, May 07, 2007

நான் அவன் இல்லை


பெண்கள் பலரை ஏமாற்றி திருமணம் செய்து, காரியம் முடிந்ததும் கழற்றி விட்டு ஓடிவிடும் ஒரு ப்ளேபாயின் கதை. அந்தப் ப்ளேபாய்தான் ஜீவன். தொழிலதிபர் விக்னேஷ் என்கிற பெயரில் மாளவிகாவிடம் மையம் கொள்கிறார். மணம் முடிக்கிறார். பிரபல ஒவியர் ஜாகீர் உசேன் பெயரில் சினேகாவை ஏமாற்றி பணம் பெற்றுக் கொள்கிறார். மாதவன் மேனன் என்று மலையாளியாக நடித்து ஜோதிர் மயியை 'பிரேமிச்சு' விவாஹம் செய்கிறார். தொடர்ந்து, ஹரிதரதாஸ் என்ற போலிச் சாமியார் வேடம் பூண்டு கீர்த்தி சாவ்லாவை மயக்கி தாலி கட்டுகிறார். ஷாம் பிரசாத் என்கிற பெயரில் தொழிலதிபர் நமீதாவிடம் மேனேஜராகிறார். நெருங்கி 'பர்சனல்' மேனேஜராகி கவிழ்த்துவிடுகிறார். இவ்வளவு பேரையும் ஏமாற்றிய ஜீவன் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொருவர் குற்றம் சாட்டும் போதும் "நான் அவன் இல்லை" என்று மறுக்கும் ஜீவன், தன் பெயர் இப்போது அண்ணாமலை என்கிறார். தான் ஓர் அப்பாவி என்கிற ஜீவன், அவர்கள் ஏமாந்தது அவரவர் பேராசையால்தானே தவிர, அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்கிறார். சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு சாதமாக்கி ஜீவனை விடுதலை செய்கிறார் நீதிபதி லட்சுமி. சே... அநியாயமா இருக்கே என்று நினைக்கிறபோது, அந்த எதிர்பாராத க்ளைமாக்ஸ்.அந்தக் காலத்து "நான் அவனில்லை" தான் இப்போது ரீமேக் ஆகி வந்துள்ளது. ஜெமினி நடித்த அந்தப் படத்தில் ஜெமினியால் முடியாததை இந்தப் படத்தில் ஜீவன் செய்திருக்கிறார். ஐந்து பேரை ஏமாற்றும் காட்சிகளில் பஞ்சமுகம் காட்டுகிறார். பஞ்ச பூதம் போல ஒவ்வொன்றும் ஒரு ரகம். வளைத்துப் போட வசீகரமும், அதற்குள் ஒளிந்திருக்கும் கள்ளத் தனமும் கலந்த மாதிரி முகம் ஜீவனுக்கு இருப்பது பொருத்தம். ஜீவன் ஒரே நபராக நடிப்பைக் காட்டி கவர்வதை, அவருடன் ஜோடி போடும் ஐவர் அணி கவாச்சி காட்டி ஈடு செய்கிறது.கவர்ச்சி விருந்து வைப்பதிலும் தங்களை காட்சிப்படுத்துவதிலும், அவர்களுக்கும் தனித்தனி போட்டியே நடக்காத குறைதான். அந்த அளவுக்கு தாராள தரிசனம்.


நடிகைகளின் கவர்ச்சியை வெளிப்படுத்த "மெனக் கெட்ட" அளவுக்கு ஜீவன் சம்பந்தப்பட்ட காட்சிகளை சுறுசுறுப்பாக்க - சுவையாக்க முயற்சி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சினேகா பாத்திரம் புத்திசாலியா, அப்பாவியா என்று தீர்மானிக்க முடியாத குழப்பம். சினேகா ஏதோ செய்யப் போகிறார் என்றால் ம்ஹும். ஏமாற்றிவிடுகிறார்.இன்றைய காவல் துறையில் முன்னேறிவிட்ட தொழில்நுட்பங்கள் போன்ற வசதிகள் இவ்வளவு பெரிய மோசடி செய்யும் ஒருவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை நம்ப முடியவில்லை.இந்த வேடங்கள், ஏமாற்றுதல்கள், தப்பித்தல்கள் அந்தக் காலத்தில் நம்ப வைக்கலாம். தொழில்நட்பமும் பொது அறிவும் வளர்ந்திருக்கிற இந்தக் காலத்தில் இதை நம்ப வைக்க இன்னமும் நூதனமாக நுணுக்கமாகச் சிந்தித்திருக்க வேண்டும். செல்போன் நம்பர் கூட வாங்காமல் தாலி கட்ட கழுத்தை நீட்டுகிறார்கள் என்பது நம்ப முடியாதது. அதே போல ஏமாறும் பெண்கள் எல்லாருமே வெளுத்ததை எல்லாம் பாலாக நம்புகிறார்கள். மின்னுவதெல்லாம் பொன்னாக மயங்குகிறார்கள். இவ்வளவு முட்டாளாகக் காட்டுவது டூ மச். பாடல் காட்சிகள் எல்லாமே காமசூத்ராவுக்கு பொழிப்புரை எழுதாத குறையாக சிருங்கார ரசம் சொட்ட வைக்கின்றன. விஜய் ஆன்டனியின் இசையில் பாடல்கள் எல்லாமே தேனாக இனிக்கின்றன. அதை கவர்ச்சியாக்கி போதை மருந்து கலந்தது காட்சிகளின் கைங்கரியம் தான் தவிர இசையின் தவறல்ல.ஆயிரம் பூக்கள் காதில் வைக்கப்பட்டாலும் கலகலப்பு, கவர்ச்சி, இளமை என்று மசாலா மணம் கமழ வைத்திருக்கிறார் இயக்குநர் செல்வா. வயிற்றுக்கு பாதகமென்றாலும் நாக்குக்கு ருசியாக இருக்கும் "பாஸ்ட் புட்" அயிட்டம் போல குறைகளை மறந்து ரசிக்கும்படி பதார்த்தம் பரிமாறியிருக்கிறார் இயக்குநர்.


(மூலம் - வெப்துனியா)



No comments: