Friday, September 09, 2011

ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்

 ஓணம் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்


இந்த பூமியில், தன்னால் எல்லாம் செய்ய முடியும் என, நினைக்கிறான் மனிதன்; ஆனால், இறை சக்தியின் முன், அவனது எண்ணங்கள் தவிடு பொடியாகி விடுகிறது. அப்படியானால், வாழ்வில் வெற்றி பெற என்ன செய்வது என்றால், இறைவனின் திருவடிகளில், ஆழ்ந்த நம்பிக்கையுடன் பணிந்து விடுவதுதான். முழு நம்பிக்கையுடன் இறைவனின் திருவடிகளில் சரணடைந்தவனுக்கு, வெற்றி மேல் வெற்றி தான்.மகாபலி சக்கரவர்த்தி, மலைநாட்டை ஆண்டு வந்தான். அவனைப் போல் நல்லவர் யாருமில்லை. என்ன கேட்டாலும் கொடுப்பான்; வாக்கு தவறாதவன். ஆனால், இந்த நற்குணங்களாலேயே, தனக்கு நிகர் யாருமில்லை என கர்வம் கொண்டான்.

இப்படி ஒரு நல்லவன், சொர்க்கத்தில் வாழ வேண்டும் என பெருமாள் நினைத்தார்; ஆனால், ஆணவம் பிடித்தவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. அந்த ஆணவத்தை நீக்குவதும் பெருமாளால் மட்டுமே முடியும். எனவே, குள்ள வடிவில் அந்தணராக வடிவெடுத்து மகாபலியிடம் வந்தார். மூன்றடி நிலம் கேட்டார். “ராஜ்யத்தையே வேண்டுமானாலும் தருகிறேன்…’ என்று அப்போதும் அவன் ஆணவத்துடன் தான் பேசினான்.
பெருமாள், திரிவிக்ரமனாக வடிவெடுத்து, இரண்டடிகளால் உலகை அளந்து, மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்றார். அவன் தலையை நீட்டினான்; தலையில் திருவடி பதித்தார். அவனுக்கு, வைகுண்ட பதவி கிடைத்து விட்டது. அதை விட பெரிய பதவி உலகில் வேறு ஏதுமில்லை.
இப்படிப்பட்ட ஒரு நல்லவன், தங்களைக் காண ஆவணி திருவோண நாளில் வர வேண்டுமென மக்கள், பெருமாளிடம் வரம் கேட்டனர்; பெருமாளும் வரமளித்தார். அதனால் தான், தங்கள் மன்னனை வரவேற்க, சகல பதார்த்தங்களுடன் மலைநாட்டு மக்கள் தயாராக இருக்கின்றனர்.
பெருமாளின் திருவடி, மகிமையி<லும் மகிமை மிக்கது. அவர், கோகுலத்தில் கண்ணன் எனும் சிறுவனாக வந்த போது, கோபிகைகளிடம் வெண்ணெய் கேட்டு கெஞ்சுவார். “கண்ணா… நீ நர்த்தனமாடினால் வெண்ணெய் தருவோம்…’ என்பர்; அவனும், சலங்கை குலுங்க நாட்டியமாடுவான். அப்போது, அவனது திருவடிகளை ரசித்துப் பார்த்த கோபிகைகள் எல்லாருமே அவனோடு கலந்தனர்.
பெருமாள் கோவிலுக்குப் போனால், முதலில் அவரது திருவடியைத் தான் தரிசிக்க வேண்டும். அதன் பிறகு, அங்க தரிசனம் செய்து முகத்தைப் பார்க்க வேண்டும். பெருமாளின் திருமந்திரங்களிலும் அவரது திருவடியின் சிறப்பே சொல்லப்பட்டுள்ளது. “ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே…’ என்பது ஒரு மந்திரம்.

“சரணௌ’ என்றால், “இரண்டு திருவடிகள்’ – “பிரபத்யே’ என்றால், “சரணடைதல்’ – “நாராயணனின் திருவடிகளில் சரணடைகிறேன்…’ என்பது மந்திரத்தின் பொருள். இவ்வாறு, யார் ஒருவர் ஆத்மார்த்தமாக பெருமாளிடம் சரணடைகிறாரோ, அவருக்கு எந்த துன்பமும் வாழ்க்கையில் இல்லை.
தெய்வங்களுக்கு எத்தனையோ தலைகள், கைகள் என்றெல்லாம் பார்க்கிறோம்; ஆனால், திருவடிகள் மட்டும் இரண்டு தான் இருக்கும். இதில், எந்த தெய்வத்திற்கும் மாறுபாடில்லை. அது மட்டுமல்ல… நமக்கு இரண்டு கை. அந்தக் கைகளால் இரண்டு திருவடிகளையும் பிடித்துக் கொள்வது எளிது. அதனால் தான், மகாபலி சக்கரவர்த்தி பெருமாளின் திருவடியை விரும்பி ஏற்றார்.
பெருமாள் உலகளந்த போது, அவரது பாதம் விண்ணை நோக்கிச் சென்றது; அது, பிரம்மாவின் பார்வையில் பட்டது. காணற்கரிய காட்சி தேடி வருகிறதே என்று மகிழ்ச்சியடைந்த பிரம்மா, அந்தப் பாதங்களை புனிதநீரால் அபிஷேகம் செய்தார். அந்த நீர் அருவி போல் பூமியிலுள்ள அழகர் மலையில் (மதுரை) விழுந்து ஆறாய் ஓடியது. அதற்கு, “நூபுர கங்கை’ என பெயர் வைத்தனர். “நூபுரம்’ என்றால், “சிலம்பு!’ “சிலம்பணிந்த திருப்பாதங்களை அபிஷேகம் செய்ததால் ஏற்பட்ட ஆறு…’ என்று இதற்கு பொருள் கொள்ள வேண்டும். நூபுர கங்கையில் நீராடுவது பெரும் நன்மையைத் தரும்.
திருவோணத்தன்று, நம் இல்லங்களில் அழகான மலர்க்கோலம் இட வேண்டும். பல வகை பாயசம், உணவு தயாரித்து பெருமாளுக்கு நிவேதனம் செய்த பிறகு, குழந்தைகளோடு மகிழ்ச்சியுடன் சாப்பிட வேண்டும். எந்தச் செயலை செய்வதாக இருந்தாலும், பெருமாளின் திருவடிகளை மனதார நினைத்த பிறகு துவங்க வேண்டும். அனைவருக்கும் பெருமாளின் அருளாசி கிடைக்கட்டும்.

No comments: