Monday, December 14, 2009

சூரியனை நோக்கி சுழலும் வீடு

ஆஸ்திரேலியாவில் சூரியன் இருக்கும் திசையை நோக்கி சுழலக் கூடிய வீட்டை ஒரு தம்பதி கட்டியுள்ளனர். அதற்கு ரூ.4 கோடி செலவாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை சேர்ந்த தம்பதி லூக், டெபி. இவர்கள் சொந்த வீடு கட்ட திட்டமிட்டபோது, வீட்டுக்குள் எப்போதும் சூரிய வெளிச்சம் படும்படி கட்ட முடிவு செய்தனர். இதற்காக வீட்டின் நடுப் பகுதியில் அஸ்திவாரம் அமைத்து, சுழலும் வகையில் பிரம்மாண்ட அச்சாணி அமைத்தனர். அதை மோட்டார் மூலம் வீட்டுக்குள் சுவிட்ச் கட்டுப்பாட்டில் இணைத்தனர். வீட்டில் விசாலமான ஜன்னல்கள், கதவுகளுடன் 3 படுக்கையறை, 2 குளியலறை, 1 சமையலறை, அலுவலக அறை, வரவேற்பறை அமைத்தனர்.
ஒட்டுமொத்த வீட்டையும் அச்சாணியுடன் வாஷிங் மெஷின் மோட்டார் அளவில் 2 மோட்டார்கள் மூலம் இணைத்தனர். அதன் கட்டுப்பாட்டை ஹாலில் வைத்துள்ளனர். அதில் வீடு சுழல வேண்டிய நேரத்தை முன்கூட்டி செட் செய்யலாம் அல்லது வேண்டும்போது கைகளால் பட்டனை அழுத்தியும் நகரச் செய்யலாம். சூரியன் உச்சிக்கு நகர்ந்து மேற்கே செல்லச் செல்ல வீடும் சூரிய காந்தி பூவைப் போல மெதுவாக திரும்பிக் கொண்டிருக்கும். அதாவது காலை 6 மணிக்கு கிழக்கில் இருந்த வாசற்படி, மாலை 6 மணிக்கு மேற்காகி இருக்கும். இதன்மூலம், சூரிய ஒளியை வீட்டில் 12 மணி நேரமும் படச் செய்ய முடியும். சோலார் ஒளியில் இயங்கும் கருவிகளை எளிதாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். வீட்டுக்குள் பகலில் மின்சார விளக்குகள் தேவைப்படாது என்பதால் மின் சிக்கனம் ஏற்படும் என்று லூக், டெபி தம்பதி தெரிவித்தனர். எங்கள் வீடு ஒரு மேஜிக் வீடு. வெயில், மழை, காற்று என காலநிலைக்கேற்ப வீட்டை திருப்பிக் கொள்ளலாம். வரவேற்பறையில் அமர்ந்து காலை முதல் மாலை வரை சூரிய வெளிச்சத்தை ரசிக்க முடியும். வீடு நகரும் உணர்வை பொறுத்துக் கொள்ள தயாராக இருந்தால், இதுபோன்ற அனுபவம் சாத்தியமே என்று லூக் தெரிவித்தார்.

மேலும் தகவலுக்கு இங்கு சுட்டவும்

நன்றி:
தினகரன்

No comments: