Monday, February 05, 2007

காவிரி நடுவர் மன்றம் இன்று மதியம் இறுதித் தீர்ப்பு அளிக்கிறது!

திங்கள், 5 பிப்ரவரி 2007

தமிழ்நாடு, கர்நாடகா இடையிலான காவிரி நதி நீர் பகிர்வு தகராறு வழக்கை கடந்த 16 ஆண்டுகளாக விசாரித்து வந்த காவிரி நடுவர் மன்றம் இன்று மதியம் இறுதித் தீர்ப்பை அளிக்கிறது!

1990 ஆம் ஆண்டு பிரதமராக வி.பி. சிங் இருந்தபோது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்க காவிரி நதி நீர் பகிர்வு தகராறை தீர்த்து வைக்க காவிரி நடுவர் மன்றம் அமைக்க உத்தரவிடப்பட்டது.

காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்ட ஓராண்டு காலத்தில் அது இடைக்கால உத்தரவு ஒன்றை வழங்கியது. அதன்படி, ஜூன் முதல் மே வரையிலான நீராண்டில் தமிழ்நாட்டிற்கு 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்றும், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்கின்ற அட்டவணையையும் தனது இடைக்கால உத்தரவில் அளித்தது.

இந்த இடைக்கால உத்தரவை நிராகரிக்கும் வகையில் கர்நாடக அரசு அவசரச் சட்டம் இயற்றியது. அதனை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர, கர்நாடக அரசின் அவசரச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஆயினும், ஒரு நீராண்டில் கூட நடுவர் மன்றம் நிர்ணயித்தபடி தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீர் அளவை கர்நாடகா திறந்துவிடவில்லை. எப்பொழுதெல்லாம் காவிரி நதி உற்பத்தித் தலங்களில் அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோ, அப்பொழுது மட்டும் அணை நிரம்பி கூடுதலான உபரி நீரை காவிரியில் திறந்துவிட்டு அதனால் மட்டுமே தமிழ்நாடு தண்ணீரை பெற்று வந்தது.

கடந்த 2 ஆண்டுகளில் அதிக மழை பெய்ததால் கர்நாடகத்தில் காவிரி மீது கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்ததால் தொடர்ந்து உபரி நீர் தமிழ்நாட்டிற்கு வந்து அதனால் மேட்டூர் அணை அதன் முழு அளவிற்கு நிரம்பியது.

இந்த நிலையில், நீதிபதி என்.பி. சிங், நீதிபதிகள் என்.எஸ். ராவ், சுதிர் நாராயண் ஆகியோர் கொண்ட காவிரி நடுவர் மன்றம் இன்று மதியம் இறுதித் தீர்ப்பு அளிக்கிறது.

காவிரி நதி நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் மாநிலங்கள் எவ்வளவு பரப்பில் விவசாயம் செய்கின்றன, அதற்கு எவ்வளவு நீர் தேவை, காவிரியில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு நீர் வருகிறது என்பதனை அளவிட்டு அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு நீராண்டில் பெறவேண்டிய தண்ணீரின் அளவை காவிரி நடுவர் மன்றம் அமைத்த மதிப்பீட்டாளர்கள் குழு அறிக்கை அளித்துள்ளது.

அந்த அறிக்கையின் படி காவிரி டெல்டா பகுதியில் 24.5 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெறும் தமிழ்நாட்டிற்கு 395 டி.எம்.சி. தண்ணீரும், 18.85 லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடைபெறும் கர்நாடகத்திற்கு 250 டி.எம்.சி. தண்ணீரும், கேரளத்திற்கு 33.4 டி.எம்.சி. தண்ணீரும், புதுவைக்கு 7 டி.எம்.சி. தண்ணீரும் அளிக்கப்பட வேண்டும் என்று மதிப்பீட்டாளர் குழு கூறியுள்ளது.

ஒரு நீராண்டில் சராசரியாக காவிரியில் 740 டி.எம்.சி. தண்ணீர் வரத்து உள்ளது என்கின்ற அடிப்படையில் இந்த பகிர்வு அளவை மதிப்பீட்டாளர் குழு அறித்துள்ளது. இதன் அடிப்படையில்தான் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதித் தீர்ப்பை அளிப்பது மட்டுமின்றி, அதனை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் காவிரி நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட வேண்டும் என்று தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

காவிரி நடுவர் மன்றம் அளிக்கும் தீர்ப்பு எல்லா மாநிலங்களும் ஏற்கக் கூடியதாக இருக்கும் என்று காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் கல்யாணம் கூறியுள்ளார்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பெற்ற ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், இடதுசாரிகளும் வலியுறுத்தியுள்ளன.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பால் எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க கர்நாடக தலைநகர் பெங்களூரிலும், மற்ற பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

source from webulagam
visit http://tamilparks.50webs.com for more

No comments: