Tuesday, May 08, 2007

நெஞ்சிருக்கும் வரை

'காதலுக்காக என் இதயத்தையே கொடுப்பேன்' என்று திரைப்படங்களில் வாழையடி வாழையென ஒவ்வொரு நாயகர்களும் சொல்வது வழக்கம். இது நடைமுறையில் அபத்தமாகத் தோன்றினாலும், 'கவிதைத்தனமாக இருக்கிறதே' என்று பலரும் ரசிப்பது உண்மையே.

இதை உண்மையிலேயே ஒரு காதலன் நடைமுறைப்படுத்தினால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு வடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். ஆனால், சொல்லப்பட்டவிதம் ஜீரணிக்க இயலாத அனுபவத்தை ஏற்படுத்துவதால், 'சிறுபுள்ளத்தனமா இருக்கு' என்று ரசிகர்களை சொல்ல வைக்கிறது.

வழக்கம்போல் ஏழை ஆட்டோ டிரைவரான நரேனை காதலிக்கிறார் பணக்கார வீட்டுப் பெண் தீபா. இதற்கு எதிர்பார்த்தபடி அப்பாவின் எதிர்ப்பு வலுக்கிறது. எல்லாத் தடைகளையும் உடைத்து பொருளை தியாகம் செய்துவிட்டு அன்பு நிலைத்திருக்கும் இடத்தில் வந்து சேருகிறார் நாயகி.

திருமணத்துக்கு இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் தருவாயில் தீபா விபத்துக்குள்ளாகிறாள். இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே உயிர் பிழைப்பதற்கான ஒரே வழி. அதற்கு பத்து லட்சம் செலவாகும். இங்கேதான் 'டயலாக்'கை நிஜமாக்க முயற்சி மேற்கொள்கிறார் நாயகன்.

இந்த முயற்சிகளைத் தொடங்கும் போது, நமது நெஞ்சை படபடக்க வைத்த திரைக்கதை, அடுத்த சில நிமிடங்களில் செயலிழக்க வைத்துவிடுகிறது.

'சித்திரம் பேசுதடி' நரேன், இந்தப் படத்திலும் தனது நடிப்பால் நிமிர்ந்து நிற்கிறார். காதல் வயப்படும்போதும், மருத்துவமனையை ஆக்ரோஷமாக சிறைபிடிக்கும்போதும், காதலியை காப்பாற்ற துடிக்கும்போதும் நடிப்பில் சிலிர்க்க வைக்கிறார்.

தீபா, படம் முழுவதும் சோகம் இழையோடும் விதமாக முகத்தை வைத்துக்கொண்டிருப்பது நெருடுகிறது.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும், பாடல் காட்சியமைப்புகளும் ஓரளவு ரசிகர்களை ரிலாக்ஸ் செய்கின்றன.

பிற்பாதிதான் ஓவர் எமோஷனல் என்றால, முற்பாதியிலாவது கொஞ்சம் கலகலப்பூட்டியிருக்கலாம். அதற்கான களம் இருந்தும் சிறப்பாக பயன்படுத்தப்படவில்லை.

மருத்துவமனை மிரட்டல்கள், நாயகனின் இதயத்தை நாயகிக்குப் பொருத்த டாக்டர் ஒப்புக்கொள்வது, அதை ரொம்ப சிம்பிளாக முடிப்பது...
ஓ... இப்படத்தைப் பார்க்க இதயத்துடன் மட்டும்தான் செல்ல வேண்டும்; மூளையை பத்திரமாக வீட்டிலேயே ஓய்வறையில் வைத்துவிட வேண்டும் போல.

மொத்தத்தில், கோர்ட், நீதி, நியாயம், நேர்மை, போலீஸ், குற்றம், கொலை, பழிவாங்கல் முதலிய சொற்களை மறந்துவிட்டு 'காதல்' என்ற இனிய சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டதற்கு இயக்குனரை பாராட்டலாம்.
- எஸ்.சரவணன் (மூலம் - வெப்துனியா)

2 comments:

Anonymous said...

மிக அருமை

சென்ஷி said...

//இப்படத்தைப் பார்க்க இதயத்துடன் மட்டும்தான் செல்ல வேண்டும்; மூளையை பத்திரமாக வீட்டிலேயே ஓய்வறையில் வைத்துவிட வேண்டும் போல.//

:)))))) நல்ல சிந்தனை.

//இதை உண்மையிலேயே ஒரு காதலன் நடைமுறைப்படுத்தினால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு வடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.//

இது ஹாலிவுட்ல சுட்டதுங்கோ :((

சென்ஷி