Thursday, May 03, 2007

உலக கோப்பையை தொடர்ந்து 3-வது முறையாக வென்றது ஆஸி.

visit
http://tamilparks.50webs.com
http://kanyakumari.sitesled.com
for more
இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்ற ஆஸ்திரேலிய அணி, உலக கோப்பையை தொடர்ந்து மூன்றாவது முறையாக கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது. இது அந்த அணி வென்றுள்ள நான்காவது கோப்பையாகும். பார்படாஸ்சில் இன்று நடைபெற்ற 2007-ம் ஆண்டின் உலக கோப்பைக் கிரிக்கெட்டுக்கான இறுதிப் போட்டியில் இலங்கை அணியை டக்வெர்லவிஸ் முறையின் அடிப்படையில் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. இந்தப் போட்டியின் துவக்கத்தில் மழை பெய்ததன் காரணமாக, ஆட்டத்தின் ஓவர்கள் 38 ஆக குறைக்கப்பட்டது. பின்னர், இலங்கை இன்னிங்ஸ்சின்போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால், 25-வது ஓவரில் 38 ஓவர்களில் 282 ரன்கள் என்ற வெற்றி இலக்கு, 36 ஓவர்களில் 269 என குறைக்கப்பட்டது. இப்போட்டியில் கடினமான வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 36 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. அந்த அணியில் ஜெயசூர்யா அதிகபட்சமாக 63 ரன்களையும், சங்ககாரா 54 ரன்களையும் எடுத்தனர்; சில்வா 21 ரன்களையும், ஜெயவர்த்தனே 19 ரன்களையும் எடுத்தனர். வாஸ் ஆட்டமிழக்காமல் 11 ரன்களையும், மலிங்கா 10 ரன்களையும் எடுத்தனர். தரங்கா, அர்னால்ட் மற்றும் ஃபெர்னாண்டோ ஆகியோர் சொற்ப ரன்களே எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் கிளார்க் 2 விக்கெட்டுகளையும், பிராக்கென், மெக்ராத், வாட்சன், ஹாக் மற்றும் சைமண்ட்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முன்னதாக, ஆஸ்திரேலிய அணி தனது இன்னிங்ஸ்சில் நிர்ணயிக்கப்பட்ட 38 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் கில்கிறிஸ்ட் 149 ரன்களைக் குவித்து அணியின் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தினார். அவரைத்தொடர்ந்து, ஹெய்டனின் 38 ரன்களும், பான்டிங்கின் 37 ரன்களும் அணிக்கு மேலும் வலு சேர்த்தன. வாட்சன் 3 ரன்களிலேயே ஆட்டமிழந்த நிலையில், கடைசிவரை ஆட்டமிழக்காமல் சைமண்ட்ஸ் 23 ரன்களையும், கிளார்க் 8 ரன்களையும் எடுத்தனர். இலங்கை தரப்பில் மலிங்கா 2 விக்கெட்டுகளையும், ஃபெர்னாண்டோ ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவெடுத்து முதலில் களமிறங்கிய இப்போட்டியில், மழையின் காரணமாக ஆட்டத்தின் இடையே ஒளிப் பற்றாக்குறை ஏற்பட்டது. இலங்கை அணி 33 ஓவர்கள் பேட் செய்து முடித்திருந்த நிலையில் மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் தடைபட்டது.அப்போது, ஆஸ்திரேலிய அணி வெற்றியைக் கொண்டாடத் தொடங்கியதால், மைதானத்தில் சற்று ஆச்சர்யமும், சலசலப்பும் ஏற்பட்டது. இதையடுத்து, சிறிது நேரம் கழித்து ஆட்டம் மீண்டும் தொடங்கி மீதமுள்ள 3 ஓவர்களுக்கும் பந்து வீசப்பட்டது. இந்த நிகழ்வு கிரிக்கெட் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 'உலக கோப்பை கிரிக்கெட் நாயகன்' மெக்ராத் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக புள்ளிகளைப் பெற்று, 2007-ன் உலக கோப்பை நாயகன் விருதைப் பெற்றார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத். அவர், இன்றைய போட்டியுடன் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வித்திடும் வகையில் 149 ரன்களைக் குவித்த கில்கிறிஸ்ட் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார். அவர், கடந்த (2003) உலக கோப்பை இறுதிப் போட்டியில் 140 ரன்கள் குவித்த ரிக்கி பான்டிங்கின் சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(மூலம் - வெப்துனியா)

No comments: