Thursday, February 08, 2007

கொல்கட்டாவில் நாளை இந்திய - இலங்கை முதல் ஒரு நாள்!

புதன், 7 பிப்ரவரி 2007
இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையே கொல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள முதல் ஒரு நாள் போட்டியில் கங்கூலியுடன் மீண்டும் இளம் வீரர் ராபின் உத்தப்பா களமிறங்கவுள்ளார்!
இப்போட்டியில் மீண்டும் களமிறங்கவுள்ள வீரேந்திர சேவாக், நடுக்கள ஆட்டக்காரராக களமிறக்கப்படுவார் என்று ராகுல் திராவிட் கூறியுள்ளார்.
உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய - இலங்கை அணிகள் பங்கேற்கும் இந்த முக்கிய போட்டித் தொடரில் இரு அணிகளும் தங்களுடைய அணிகளை முழுமைபடுத்திக் கொள்ளும் கடைசி வாய்ப்பாக இதனைக் கருதுகின்றன.
தென் ஆப்ரிக்காவில் நடந்த டெஸ்ட், ஒரு நாள் தொடர்களில் மோசமாக விளையாடிய காரணத்தினால் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தும், பிறகு அணியில் இருந்தும் நீக்கப்பட்ட வீரேந்தர் சேவாக், உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவதற்கு நாளை முதல் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் களமிறங்கிய உத்தப்பா சிறப்பாக ஆடியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ள சேவாக், நாளை சிறப்பாக விளையாடி தனது திறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்திய அணிக்கு புதிதாக ஒரு சவால் உருவாகியுள்ளது. அஜீத் அகார்கர், இர்ஃபான் பத்தான், யுவராஜ் சிங் ஆகியோர் நாளை ஆடுவார்களா என்பது உறுதியாகவில்லை. அஜீத் அகார்கருக்கு காய்ச்சல், இர்ஃபான் பத்தானிற்கு தோள்பட்டையில் காயம், யுவராஜ் சிங்கிற்கு முதுகில் பிடிப்பு என்று அணித் தலைவர் திராவிட் கூறியுள்ளார்.
எனவே நாளை களமிறங்கும் அணியை நாளை காலை தான் முடிவெடுத்து அறிவிக்கப் போவதாக திராவிட் கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில், கங்கூலியுடன் உத்தப்பாவை துவக்க ஆட்டக்காரராக களமிறக்கி, வீரேந்தர் சேவாக்கை நடுக்கள ஆட்டக்காரராக களமிறக்க திராவிட் முடிவு செய்துள்ளார்.
இலங்கை அணியும் உலகக் கோப்பைக்கான தனது அணியை முடிவு செய்ய இத்தொடரை நன்கு பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அணித் தலைவர் மஹிலா ஜெயவர்தனே, முன்பை விட பலம் வாய்ந்த அணியாகவே இலங்கை அணி இந்தியா வந்துள்ளது என்றும், குறிப்பாக வேகப்பந்து வீச்சில் மிக பலமான நிலையில் இந்திய அணியை சந்திக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
அதிரடி ஆட்டக்காரர் சனத் ஜெயசூர்யாவும், குமார சங்ககாராவும் நமது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முழு சோதனையை அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இவர்களைத் தொடர்ந்து ஆடவரும் அட்டபட்டுவும், ஜெயவர்தனேயும், உப்புல் தாரங்காவும் அதிரடியாக ஆடி ரன்களைக் குவிக்க வல்லவர்கள்.
இலங்கை அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை 150 கி.மீ. வேகத்தில் வீசவல்ல லாசித் மலிங்கா தங்களுக்கு முக்கிய பலம் என்று ஜெயவர்தனே கூறியுள்ளார்.
மொத்தத்தில் நாளைய போட்டி விறுவிறுப்பானதாக இருக்கும். பகலிரவுப் போட்டியாக பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கும் இப்போட்டியின் பந்துக்குப் பந்து வர்ணனையை ஆட்டத்தின் துவக்கம் முதல் இறுதி வரை வெப்உலகம்.காம் உங்களுக்கு தொடர்ந்து வழங்கும் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்திய அணி :
ராகுல் திராவிட் (அணித் தலைவர்), சௌரவ் கங்கூலி, வீரேந்தர் சேவாக், சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, தினேஷ் கார்த்திக், இர்ஃபான் பத்தான், ஹர்பஜன் சிங், அஜீத் அகார்கர், ஜாஹீர் கான், ஸ்ரீசாந்த், முனாஃப் பட்டேல், ராபின் உத்தப்பா, அனில் கும்ளே.
இலங்கை அணி :
மஹிலா ஜெயவர்தனே (அணித் தலைவர்), ஜெயசூர்யா, உப்புல் தாரங்கா, குமார சங்ககாரா, மார்வான் அட்டபட்டு, ரஸ்ஸல் ஆர்னால்ட், திலகரத்னே தில்ஷான், உப்புல் சந்தனா, சமிந்தா பண்டாரா, தில்ஹாரா ஃபெர்னாண்டோ, குலசேகரா, ஃபர்வீஸ் மஹ்ரூஃப், லாசித் மலிங்கா, எல்.பி. சில்வா, நுவான் சோய்ஸா.


visit webulgam for more

No comments: