Monday, November 20, 2006

குட்டிக் கதை

சம்பத்து உடையவனாகிய ஒரு வர்த்தகன் இருந்தான். அவன் தன் பல்லக்குச் சுமக்கிற ஆட்களை அழைத்து, "பசுமாட்டுக்கு நாள்தோறும் புல்லுவெட்டிக் கொண்டுவந்து போடுங்கள்" என்றான். அதற்கு அவர்கள் "நாங்கள் பல்லக்கு மாத்திரம் சுமப்போம். வேறு வேலை செய்யமாட்டோம்" என்றார்கள்.

இப்படி இருக்கும்பொழுது ஒருநாள் பசுவின் கன்று வெளியில் ஓடிப்போயிற்று. அப்பொழுது வர்த்தகன் அந்தச் சிவிகையாட்களைப் பார்த்து, "கன்றைத் தேடிப்பிடித்துக்கொண்டு வாருங்கள்" என்று சொல்ல, அவர்கள் "நாங்கள் பல்லக்குச் சுமக்கிறவர்களோ, மாடு மேய்க்கிறவர்களோ" என்றார்கள். அப்பொழுது வர்த்தகன் அவர்களுக்குப் புத்தி வரும்படி செய்யவேண்டுமென்று யோசித்து, மத்தியான வேளையிலே பல்லக்குக் கொண்டு வரச் சொல்லி, அதிலே தான் ஏறி, கன்றைத் தேடும்படி நெருஞ்சிமுள் இருக்கிற காட்டு பார்க்கமாய்ப் போகச் சொன்னான். அப்படியே போய்த் திரிந்து வருந்துகையில், வர்த்தகனிடத்தில் முறையிட்டார்கள். அதற்கு அவன் "பல்லக்குச் சுமக்கிறது உங்கள் கடமை, கன்றைத் தேடுகிறது என் கடமை" என்று சொல்லி, அவர்கள் பல்லக்கை நிறுத்தாமற் சுமக்கும் படி செய்தான். அன்று முதல் அவர்கள் நல்ல புத்தி அடைந்து, எசமானன் ஏவும் எந்தக் காரியத்தையும் செய்வது கடமை என்று ஒப்புக் கொண்டார்கள்.

No comments: