Friday, July 28, 2006

ஆன்லைனில் பாதுகாப்பான பணபரிமாற்றத்திற்கு சில ஆலோசனைகள்

பண பரிமாற்றத்திற்காக பல மணி நேரம் காத்திருந்த நிலை மாறி தகவல் தொழில்நுட்பத்தின் உதவியால் இணைய வழியில் விரைவாகவும் எளிதாகவும் வங்கி கணக்கை கையாளுதல் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இருந்தும் நாம் செய்யும் சிறு தவறுகள் பெரிய இழப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. இவற்றை தவிர்த்து இணைய வழியில் வங்கி கணக்குகளைக் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் கையாள சில குறிப்புகளைக் காண்போம்.

இணைய வழியில் கணக்குகளை கையாள்பவர்களுக்காக வங்கிகள் பல கொள்கைகளையும் குறிப்புகளையும் தங்கள் இணைய தளங்களில் பதிப்பித்திருக்கிறார்கள். இவற்றை நாம் படிக்க தவறி விடுகிறோம். இவற்றை கட்டாயம் படிக்க வேண்டும். எந்தவகையான பாதுகாப்பு நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொண்டு வருகின்றன என்பன போன்ற தகவல்களை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

முக்கியமாக இணைய வழியில் கணக்குகளை கையாளும் போது பாதுகாப்பு குறியீட்டு சொல்லை (Password) மிக கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறரால் ஊகிக்க முடியாத வகையில் எண்ணும் எழுத்தும் கலந்து இவற்றை உருவாக்குவது மிக அவசியம். இப்படி உருவாக்கிய சொற்களை காகிதங்களில் எழுதி வைப்பதை தவிர்த்து விடுங்கள். அதே போல கணக்கு விபரங்களை காகிதங்களில் எழுதி வைப்பதையும் தவிர்த்தல் நல்லது. இதனால் நம் கணக்கில் உள்ள பணத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

வங்கி கணக்கில் பணம் இல்லாத போது பல நண்பர்கள் தங்களுக்குள் வேடிக்கையாக வங்கி விபரங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அதுவே ஆபத்தாக சில வேளைகளில் முடிந்து விடுவதும் உண்டு. எனவே பொது இடங்களில் வங்கி விபரங்களை யாரிடமும் தெரிவித்தல் நல்லதல்ல. கணிணிகளில் ஆண்டி-வைர°, பயர்வால் மற்றும் ஆண்டி-°பைவேர் போன்றவற்றை நிறுவி கணிணி தகவல்கள் திருட்டு போகாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

தனிப்பட்ட முறையில் கணிணிகளை உபயோகித்தாலும் கூட செய்திகளை மறைமுகமாக சேமித்து வைக்கும் வசதிகளை (Cookies) ஏற்றுக் கொள்ளக் கூடாது. கூடிய வரையில் உங்கள் கணக்கை குறைந்தபட்சம் 15 நாட்களுக்கொரு முறையேனும் சரி பார்த்து வருவது நல்லது. இதனால் அனுமதி பெறாதவர்களின் நுழைவு இருக்கிறதா என்பதை அறியலாம்.

இணைய வழியில் வங்கி கணக்குகளை கையாளும் போது அவசரமோ பதற்றமோ இல்லாத மனநிலையில் இருங்கள். அதேபோல பல இணைய பக்கங்களை திறந்து வைத்திருப்பதையும் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் இவற்றால் வங்கி கணக்குரிய தகவல் திரையை மூடாமல் மறந்து இருந்து விட வாய்ப்புள்ளது.

நீங்கள் இணைய மையங்களில் வங்கி கணக்குகளை கையாளும் போது உங்கள் அருகிலோ அல்லது பின்புறமோ யாரும் இல்லாதபடி கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் பின்புறத்திலோ அல்லது பக்கவாட்டிலோ கண்ணாடிகள் இருந்தால் கூட அவ்விடங்களில் வங்கி கணக்குகளை கையாள்வதை தவிர்த்து விடுவது நல்லது.

நம் சேமிப்பை பாதுகாக்க நம் முயற்சிகள் தானே கை கொடுக்கும்! சில சிறிய பயிற்சிகள் பல பெரிய இழப்புகளை தவிர்க்க உதவும் என்பதால் விழிப்புடன் இருப்போம்! சேமிப்பை காப்போம்!

No comments: