Monday, July 17, 2006

நெஞ்சம் மறக்குமோ?

http://newworld.50webs.com

பிழாவில் உடன் கள்ளு,
கிடாய்ப் பங்கு, நுங்கு,
ஆடிக்கூழ், கீரிமலை,
பாபநாச யாத்திரைகள்,
தோடியில் சீக்காய்,
நள்ளிரவு முழு நிலவு,
வேலி எல்லாம் குளை நிரம்பி
பூவரசில் மசுக்குட்டி,
சோலிதான்,
ஆனாலும் முட்கிழுவை
இலை தேச்சு
சுடு சாம்பல் போட்டு
இழுக்கையில் தோல் மீது
தடிச்சுக் கடிச்சாலும்,
சோறியேக்கை
தோன்றுகின்ற
சுகமான அனுபவங்கள்.

பின்னேரம் யாழ்தேவி
பிடிச்சால்
மறுநாளே அந்நேரம்
கொழும்பால்
மீண்டூர் வருகின்ற
என்ன ஓர் வாழ்க்கை!

இன்னும் எத்தனையோ,
எத்தனையோ,
இழந்தாலும்,
'நெஞ்சால்
இழக்கேலா ஞாபகங்கள்"
எல்லாம் போயிப்ப
இருண்ட பெருவெளி ஆகி
சல்லடையாய்
நம் தேசம்
சபித்தது போல்....
இப்ப.....
வஞ்சகம் அறியாத
எஞ்சிய பனை மரங்கள்
வட்டிழந்து, வடிவழிந்து
எம்மைப் போல் நிற்கிறது.
உடைந்து சிதறி
அத்திவாரம் மேல்வந்து
குடைந்த பெருங்குழியாய்
வீடுகள் கிடக்கிறது.
அடிக்கடி அலறல்கள்
அனுதாப முணுமுணுப்பு.

துடித்திறந்தும் உரிமை
கேட்கேலா சில உடல்கள்,

இனம் புரியா ஓர் அமைதி
நாளுக்கு நாள் வேறுபடும்.
சனம் பழகி, இதனைச்
சட்டை செய்யாதொதுங்கும்,
ஊரின் நிம்மதியோ
நிசப்தம் போற் பொருளில்லை,
ஆனால்
'வேரின் பக்கமென
விழுதான தியாகங்கள்
இன்றும் உரமாக
இருப்பறிந்த நிலையாலே
என்னைப் போலவே
உணர் வோடு.....

'திருக்குமரன் கவிதைகள்' தொகுப்பிலிருந்து

No comments: