Wednesday, March 29, 2006

வெற்றுத் திண்ணை

Visit Tamil Parks

சத்தியவும் அவளுடைய தந்தையும் பேருந்திற்காகக் காத்திருந்தனர். சத்தியா ஆட்டுக்குட்டியைத் தன் கையில் பிடித்திருந்தாள். தேநீர்க் கடை வெளிச்சம் சத்தியா வைத்திருந்த ஆட்டுக்குட்டியின் மீது விழுந்தது.

ஊருக்கு வரும் முதல் பேருந்தது மெதுவாகத் தேநீர்க் கடை அருகே வந்து நின்றது. ஆட்டுக்குட்டியுடன் பேருந்தில் போகக்ப்போவதை நினைத்து சத்தியவுக்கு ஒரே மகிழ்ச்சி......


பேருந்து 'பாம்.....பாம்........' என்று ஒலி எழுப்பியது.... ஆடு 'ம்மே..........ம்மே..............' என்று கத்தியது........."ஏய் மணி! கத்தாதே..........! நாம் வண்டியில் ஏறிப் போகப் போகிறோம்" என்றாள் சத்தியா.

மூவரும் பேருந்தின் அருகில் சென்றனர்.

"யாராது? ஆட்டுக்குட்டியை வண்டியில் ஏற்றுவது? இறங்கு! இறங்கு!" என்று நடத்துனர் கத்தினார்.................

"ஐயோ, பேருந்தில் கூட்டமில்லையே, ஏற்றக் கூடாதா?" என்றர் சத்தியாவின் தந்தை.........

"சரி சரி ஓட்டுநரை கேட்டுப் பாருங்கள்..............என்றார்

திரும்பி பார்த்த ஓட்டுநர் "ஏற்றிகொள்ளுங்கள்" என்றார்.

மூவரும் பேருந்தில் ஏறினர் பேருந்து விரைந்தது.....................

பேருந்தின் சத்தத்தினாலும் குலுக்கலினாலும் ஆட்டுக்குட்டி மருண்டது............

'ம்மே...........ம்மே................."
ஆட்டுக்குட்டி சத்தியாவின் கையிலிருந்து துள்ளியோட முயன்றது............

அருகில் வந்த நடத்துனர் ஆட்டுக்குட்டியின் தலையை மெதுவாகத் தடவினார்....."எங்கே போக வேண்டும்?"...............

"சந்தைக்கு...." என்றார் சத்தியாவின் தந்தை..........

சத்தியா ஆட்டுக்குட்டியின் தலையை வளைத்து அணைத்துக் கொண்டாள்.......... அது தன் முகத்தை அவளது முகத்தில் உரசியது..........

"ஆட்டை என்னிடம் கொடு" என்றார் அப்பா

"வண்டாம் அப்பா நானே வைத்துக் கொள்கிறேன்" என்றாள் சத்தியா

பேருந்து சந்தையின் அருகில் நின்றது........

"அப்பா, எதற்காக நாம் சந்தைக்குப் போகிறோம்?"

"ஆட்டுக்குட்டியை விற்க"

சத்தியா...........திடுக்கிட்டாள்.................

"வேண்டாம் அப்பா, நான் என் மணியைத் தரமாட்டேன், மணி எனக்கு வேண்டும்: என்றாள் சத்தியா

"திருவிழா வருகிறது. துணிமணி எடுக்க வேண்டும்......செலவுக்குப் பணம் இல்லை........அதனால் ஆட்டுக்குட்டியை விற்கத்தான் வேண்டும்"

விக்க வேண்டாம் அப்பா.....................வீட்டுக்குப் போவோம் அப்பா.........................வாங்க................" (சத்தியாவின் கண்களில் நீர் ததும்பியது........)

பரபரப்பாக ஆட்டு வியாபாரம் நடந்து கொண்டிருந்த இடத்துக்குச் சென்றார்........வியாபாரியிடம் ஆட்டுக்குட்டியை விலை பேசினார் சத்தியாவின் தந்தை...

"நான் தரமாட்டேன்..........தரமாட்டேன்........." கண்ணீருடன் சத்தியா அழத் தொடங்கினாள்..

"உன்னக் கூட்டி வந்தது தொந்தரவாகப் போயிற்றே..." என்றவர் ஆட்டுக்குட்டியை 'வெடுக்' எனப் பிடுங்கி வியாபாரியிடம் கொடுத்தார்... பணத்தைப் பெற்றுக் கொண்டார்.

ஆட்டுக்குட்டி மிரண்டு 'ம்மே..........ம்மே......" என்று கத்தியது.....

திரும்பி திரும்பித் தன் ஆட்டுக்குட்டியைப் பார்த்தவாறே சென்றாள் சத்தியா......

'அங்கே பார்! குடைராட்டினம் சுற்றுகிறது. ஏறிப் பார்க்கிறாயா?'

'பொரி கடலை உனக்குப் பிடிக்குமே, வாங்கித் தரவா?'

பதில் இல்லை.

'உனக்குச் சட்டை வாங்கலாம், வா'

"வேண்டாம் அப்பா, வீட்டிற்குப் போகலாம்"

இருவரும் அமைதியாக வீட்டிற்குத் திரும்பினர். சத்தியா வீட்டிற்குள் போகாமல் திண்ணையிலேயே உட்கார்ந்தாள். ஆட்டுக்குட்டி கட்டியிருந்த தூணில் கயிறு மட்டும் இருந்தது. அந்தக் கயிற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள்............

Monday, March 27, 2006

சொர்க்கத்தில் நரி

நரி ஒன்று தாகத்தால் தவித்தது.

எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.

என்ன செய்வது...?

தண்ணீரைத் தேடி அலைந்தது.

தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்தது. கிணற்றின் அருகே சென்றது, கிண்ற்றில், கயிற்றின் ஒரு முனையில் வாளி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நரி, வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உட்னே வாளி 'விரி'ரெனக் கிண்ற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. 'எப்படி வெளியேறுவது' என்று யோசிக்கத் தொடங்கியது.

'மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால்தானே என்னால் மேலே போக முடியும். என்ன செய்வது?'

நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது.

அந்த நேரம் பார்த்துக் கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. கிண்ற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது.

அங்கு நரி இருப்பதைக் கண்டது.

"அடடா! நரி ஐயா! உள்ளே என்ன செய்கிறீர்கள்?" எனக் கேட்டது.

"நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள்" என்றது நரி

ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது. அந்த வாளி 'சரசர'வென்று கிணற்றின் உள்ளே போயிற்று. அப்போது நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது.

நரி மேலே வரும் போது பாதி வழியில் ஓநாயைப் பார்த்தது.

"நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்குப் போகிறேன்". என்று கூறிக் கொண்டே மேலே சென்றது. மேலே வந்ததும் கிணற்றுச் சுவரின் மேலே தாவிக் குதித்துத் தப்பியோடியது.

பாவம் ஓநாய்................!

ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும் .......................

Friday, March 24, 2006

உலகில் மிகப்பெரியவை

1. ஆசியாக் கண்டம்

2. பசிபிக் சமுத்திரம்

3. ஆஸ்திரேலியா தீவு

4. எவரெஸ்ட் சிகரம்

5. இமயமலை

6. அமேசான் ஆறு

7. காஸ்பியன் ஏரி

8. லண்டன் நகரம்

9. சஹரா பாலைவனம்

Wednesday, March 22, 2006

புதிய வேகம்

இளைஞனே !
தோல்வி என்பது ரணங்கள்
வெற்றி என்பது
அதனை குணபடுத்தும் மருந்துகள்
தோல்வி என்பது முடிவில்லா
அது ஆரம்பத்தின் அஸ்திவாரம்
உனக்குள்
வேகத்தை தூண்டி விடுகிற
அதித சக்தி
தோல்வி உனக்கு
பாடத்தை கற்றுத் தருகிற
பள்ளி கூடம்
உனக்கு
அனுபவத்தை போதிக்கிற ஆசான்
தோல்வி எழும்போது
சிந்தித்தால் தான்
வெற்றியை நீ சாதிக்க முடியும்
அதனால்
தோல்விகளை ஏற்றுகொள்
சோதனைகளை தாங்கிக் கொள்
சோர்ந்து விடாதே!
புறபடு ...
புதிய வேகத்தோடு
வெற்றியின் இலக்கை நோக்கி!

(படித்தவை)

எழுதியவர்: தமிழ்மலர்

Tuesday, March 21, 2006

தமிழர் நோக்கில் பண்பாடும் மொழியும் - இ.அண்ணாமலை

தமிழ்ப் பண்பாடு பெருமையாகச் சொல்லிக்கொள்ளப்படும் ஒன்று. தமிழர்களுக்கே உரிய பண்புகள் சில உண்டு என்பதும்; அவை தமிழர்களைத் தனிப்படுத்திக்காட்டுவன, சிறப்புப்படுத்திக் காட்டுவன என்பதும் தமிழ் சார்ந்த அறிவு ஜீவிகளிடம் பரவலாகக் காணப்படும் நம்பிக்கை. தமிழர்களைத் தனிப்படுத்திக் காட்டுவதில் முதன்மையானது மொழி என்பதில் ஐயமில்லை. மொழி பண்பாட்டின் அடிப்படையான அம்சம்; பண்பாட்டை வெளிப்படுத்தும் சாதனம். தனிப்படுத்திக் காட்டும் மற்ற பண்பாட்டுக் கூறுகள் எவை என்று நிறுவுவது எளிதானது அல்ல. அந்தப் பண்பாட்டுக் கூறுகள் மற்ற சமூகத்தினரிடம் இல்லாதவையாக இருக்க வேண்டும். தமிழ்ச் சமூகத்தின் எல்லாப் பிரிவினரிடையேயும் இருப்பவையாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவற்றைத் தமிழருக்கே உரிய பண்பாட்டுக் கூறுகளாகச் சொல்ல முடியும்.

இந்த இரண்டு அடிக்கோல்களின் அடிப்படையில் புறநோக்கில் தனித்தன்மையைக் கணிப்பது கடினமானது. தமிழ்ப் பண்பாடு என்று தமிழர்கள் சொல்லும்போது அவர்கள் அகநோக்கில் தங்களைப்பற்றி மானசீகப்படுத்திக் கொள்வதையே குறிக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அதுதான் உண்மையானது. இவ்வாறு மானசீகப்படுத்திக் கொள்வது பெரும்பாலும் அறிவுஜீவிகளால் செய்யப்பட்டுப் பொதுமக்களுக்குப் பரவும் எனவே அது அறிவுஜீவிகளின் வாழ்க்கை மதிப்பீட்டை ஒட்டி அமைந்திருக்கும். இவ்வாறு மானசீகப்படுத்திய பண்புக் கூறுகள் வேறு சமூகத்தினரிடையேயும் இருக்கலாம். தமிழர்களின் நடைமுறை வாழ்க்கையில் இல்லாமலும் இருக்கலாம். மானசீகப்படுத்துவதற்கு இந்த நடைமுறை உண்மைகள் தடையாக இருப்பதில்லை.

தங்கள் பண்புக்கூறுகள் சிறந்தவை என்பதும் ஒருவகை வாழ்க்கை மதிப்பீட்டின் அடிப்படையில் கூறுவது தான், மதிப்பீடு இல்லாத நிலையில் பண்புகளில் ஏற்றத்தாழ்வு இல்லை.

கற்பு என்ற பண்பை எடுத்துக்கொள்வோம். தமிழ்க் கற்பு என்பது உயர்ந்த பண்பாகப் போற்றப்படும் ஒன்று. பொதுநிலையில் கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பால் ஒழுக்க உறவை வரையறுக்கும் ஒரு பண்பு. எந்தச் சமூகத்திலும் அதன் கட்டுக்கோப்பைக் காக்கவும், அதன் சுயவளர்ச்சி¨யை உறுதிசெய்யவும் அவசியமாக இருக்கும் பண்பு. இந்தப் பண்பு ஒவ்வொரு சமூகத்திலும் அதன் தேவைக்கு ஏற்றபடி ஒவ்வொரு விதமாக இருக்கலாம். ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்குப் பலர் போன்ற பலவும் வெவ்வேறு சமூகங்களில் வழங்குகிற, அந்தந்தச் சமூகங்களுக்குத் தேவையான கற்பு நெறிகள்தான்.

ஒருத்திக்கு ஒருவன் என்ற கற்பு நிலையே தமிழ்ப் பண்பாடாகப் பேசப்படுகிறது. ஏக பத்தினி விரதன், பிறன்மனை நோக்காப் பேராண்மை என்று ஆண் நிலையிலும் கற்பு பேசப்பட்டாலும் கற்பு, பெண்ணின் ஒழுக்க நெறியாகவே நடைமுறையில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மழை வருவித்தல், ஊரை எரித்தல் போன்ற இயற்கை விதிகளை மீறும் ஆற்றலைப் பெண்ணின் கற்புக்குக் கொடுத்திருப்பதைப் போல ஆணின் கற்புக்குத் தனி ஆற்றல் எதுவும் கொடுக்காதது இதை வெளிப்படுத்தும். எனவே கற்பு என்பதற்குத் தமிழ் பண்பாட்டில் தனி அர்த்தம் கொடுக்கப்படுகிறது. அது பெண்ணின் பால் ஒழுக்க நெறியை வரையறுக்கும் பண்பாகவே கொள்ளப்படுகிறத.

மனத்தாலும் மற்ற ஆணை நினைக்கக்கூடாது என்று பெண் கற்பை வலியுறுத்தும் தமிழ்ச் சமூகத்தில்தான், திரைப்படக் கதாநாயகனை மனத்தால் கூடும் ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’ வும் உறுப்பினராக இருக்கிறார்கள். இதேபோல் பெண்ணைத் தெய்வமாகப் போற்றுவது தமிழ்ப் பண்பு என்று சிறப்பித்துக் கூறிக்கொள்ளும் தமிழ்ச் சமூகத்தில்தான் பெண் குழந்தைகளைப் பிறந்தவுடன் கொன்றுவிடுகிற பிரிவினரும் இருக்கிறார்கள். எனவே தமிழ்ப் பண்புகள் என்று போற்ப்படுபவை நடைமுறையில் இல்லாவிட்டாலும், அவை மானசீகப்படுத்திக் கொண்ட பண்புகளே.

மானசீகப்படுத்திக்கொண்ட பண்புகள் ஆதர்சநிலையை காட்டுகின்றன. ஆதர்சநிலை விதிநிலையை நிர்ணயித்தது. தமிழ்ப் பண்பாடு என்று தமிழர்கள் பேசும்போது தாங்கள் ஆதர்ச நிலையிலும் விதிநிலையிலும் காண்கிற ஒன்றைத்தான் குறிக்கிறார்கள். அது நடைமுறையில் இருக்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.

இப்படி நடக்கவேண்டும் என்ற நடத்தை விதிகளும் பண்பாட்டின் கூறுதான். அவை இதை இப்படிச் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் விதிப்பதுபோல சமூகத்தின் அறிவுஜீவிகள் விதிக்கும் பண்புக்கூறுகள். அவை ஒருவன் தன்னியல்பாக உண்ணும் உணவல்ல. மருத்துவர் விதிப்படி உண்ணும் பத்திய உணவு. மரபிலக்கண விதிகள் எப்படி மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் மொழி விதிகள், ஒருவனுடைய இயல்பான பேச்சின், எழுத்தின் அடிப்படையாக அமைந்திருக்கும் விளக்க விதிகள் அல்ல. தமிழர்கள் தமிழ்ப் பண்பாடு என்று செல்லும்போது மேலே சொன்ன கட்டுப்பாடு விதிகளையே குறிக்கிறார்கள்.

இது இப்படி இருக்க வேண்டும் என்ற விதிமுறையில் அல்லாமல் இது இப்படி இருக்கிறது என்று விளக்கமுறையில் பார்க்கும்போது உலகின் எல்லாப் பண்பாடுகளுக்கும் பொதுவான, அடிப்படையான கூறு. வாழ்க்கையை அர்த்தப் படுத்திக்கொள்வது, உண்பது, உறங்குவது, உடலுறவு கொள்வது மட்டுமே மனித வாழ்க்கை அல்ல என்று விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தி, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும் பிற உயிர்களையும் இயற்கைப் பொருள்களையும் தன் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி, அவற்றுக்குத் தன் வாழ்க்கையில் இடம் தந்து தன் இருப்பைப் புரிந்து கொள்வதே வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வது ஆகும். இந்த வாழ்க்கை அர்த்தம் கருத்துகள், நம்பிக்கைகள், நடைமுறைகளின் மூலம் வெளிப்படும். இவற்றின் தொகுப்பையே விளக்கநிலையில் பண்பாடு என்கிறோம்.

தமிழ்ச் சமூகத்தை இந்த நோக்கில் பார்த்து அதன் தனிப் பண்புகளை - அதாவது வாழ்க்கையைப் பற்றிய அதன் தனி அர்த்தங்களை - நிறுவும் போதுதான் விளக்கநிலையில் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைப் பற்றிப் பேச முடியும். விளக்கநிலையில் பண்பாடுகளுக்கிடையே - அர்த்தப்படுத்திக்கொண்ட - வாழ்க்கைகளுக்கிடையே - உயர்வு தாழ்வு இல்லை. இந்த நோக்கில் அமெரிக்கப் பண்பாடு, தமிழ்ப்பண்பாடு என்ற இரண்டில் எது உயர்ந்தது என்ற கேள்வி அர்த்தமில்லாதது. இதைப்போலவே தமிழ்ச் சமூகத்தின் சங்ககாலப் பண்பாட்டையும் இக்காலப் பண்பாட்டையும் ஒப்பிட்டு உயர்வு தாழ்வு காண்பதும் தவறானது. ஒரு சமூகத்தினுடைய, ஒரு காலத்தினுடைய பண்பாட்டின் அடிப்படையில் இன்னொரு சமூகத்தினுடைய, இன்னொரு காலத்தினுடைய பண்பாட்டை எடைபோடுவது தவறாகும். ஒவ்வொரு சமூகமும் தன்னைக் காத்துக்கொள்ளும் வகையில் தன் சமகால வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்கிறது. இது பரிணாமநியதி. எனவே தான் பண்பாட்டு மாற்றம் இருக்கிறதே தவிரப் பண்பாட்டு அழிவு இல்லை என்கிறோம். ஒரு சமூகத்தினர் முற்றிலுமாக அழியும்போது, ஒரு சமூகத்தினர் தங்கள் பண்பாட்டை விட்டுவிட்டு இன்னொரு சமூகத்தினரின் பண்பாட்டை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளும்போது பண்பாட்டு அழிவு நேரலாம். ஆனால் இது அபூர்வம். மொழிக்கும் இது பொருந்தும்.

வாழ்க்கையின் அர்த்தம் - பண்பாடு - நிலையானது அல்ல. அது காலந்தோறும் மாறும். மாற்றம் தவிர்க்க முடியாதது. ஏனென்றால் மனிதனைச் சுற்றியிருப்பவை மாறுகின்றன. அந்த மாறுதல்களோடு தன்னை இணைத்த வாழ்க்கையைப் புரிந்து கொள்வதும் மாறுகிறது. தமிழ்ப் பண்பாடு இரண்டாயிரம் ஆண்டுகளாக மாறவில்லை என்று சொல்வது உண்மைக்குப் புறம்பானது. நடக்க முடியாதது. அதே நேரத்தில் வெளிவடிவம் மாறினாலும் அடிப்படைத் தன்மை மாறாமல் இருக்கும் பண்புகளும் பண்பாட்டில் உண்டு. ஆழ்நிலையில் இருக்கும் அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்த இரண்டின் அடிப்படையிலும் இன்றைய தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு என்ன என்ற கேள்விக்கு விடை காண முயல வேண்டும். சங்ககால மரபுப் பண்பாடே இன்றைய தமிழ்ப் பண்பாடு என்பதும், ஏற்றுக் கொண்ட மேல்நாட்டின் புதிய பண்பாடே இன்றைய தமிழ்ப்பண்பாடு என்பதும் விடை ஆகாது. இரண்டின் ஊடாட்டத்தில் விளைந்த ஒன்றே இன்றைய தமிழ்ப் பண்பாடாக இருக்க முடியும்.

பண்பாட்டின் அடிப்படை அம்சமான மொழியைப் பற்றிய தமிழர்களின் கருத்துகளும் மேலே சொன்ன பிற பண்பாட்டுக் கூறுகளைப் பற்றிய அவர்களது கருத்துக்களைப் போன்றவையே. அவர்களுடைய மொழி நோக்கு, மொழியின் நடைமுறை வழக்கின் அடிப்படையில், விளக்கநிலையில் அமையாமல் மானசீகப்படுத்தப்பட்ட ஆதர்சநிலையில், விதிநிலையில் அமைந்திருக்கிறது. அமைப்பில் தமிழ் மொழி தனித்தன்மை உடையது. மற்ற மொழிகளைவிடச் சிறந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளாக மாறாதது என்ற கருத்து தமிழ் சார்ந்த அறிவு ஜீவிகளால் போற்றப்படுகிறது.

ஒவ்வொரு சமூகமும் அதன் பண்பாட்டின் அடிப்படையில் சில சாதனைகள் புரிகிறது. வெவ்வேறு பண்பாடுகள் வெவ்வேறு சாதனைகள் புரியலாம். பண்பாட்டின் சாதனைகளையே நாகரிகம் என்கிறோம். சாதனைகளில் உயர்வு, தாழ்வு உண்டு, வாழ்வு தாழ்வும் உண்டு. எனவே ஒரு நாகரிகம் சிறந்த நாகரிகம் என்றோ அழிந்த நாகரிகம் என்றோ சொல்லலாம். ஒரு சமூகம் தன் பண்பாட்டின் விளைவாக எழுத்தையோ வெடிமருந்தையோ கண்டுபிடித்து அதன் மூலம் அதிகார பலம் பெற்று உயர்ந்த நாகரிகம் என்று பெயர் பெறலாம். வேறு சாதனைகளால் அதைவிட அதிகார பலம் பெற்ற இன்னொரு நாகரிகத்தால் வெல்லப்பட்டு அழிந்த நாகரிகம் என்றும் பெயர் பெறலாம். பண்பாட்டிற்கு உயர்வோ அழிவோ இல்லை. நாகரிகத்துக்கு உண்டு. ஒருவன் பண்பாட்டை உயர்ந்தது, தாழ்ந்தது என்று வகைப்படுத்தினால் அது நாகரிகத்தை வகைப்படுத்துவதாகவே அமையும்.

தமிழ்ப் பண்பாடு கட்டடக்கலை, நுண்கலை, நீர்ப்பாசனம், கடல் வணிகம் முதலியவற்றில் முன்காலத்தில் படைத்த சாதனைகளைத் தமிழ் நாகரிகம் எனலாம். தமிழ்மொழி இலக்கியம், இலக்கணம், ஓரளவு தத்துவம் ஆகியவற்றில் படைத்த சாதனைகளும் தமிழ் நாகரிகத்தில் அடங்கும். இரு பண்பாடுகளின் ஊடாட்டத்தால் புதிய சாதனைகள் - நாகரிகங்கள் - பிறப்பதை உலக வரலாறு காட்டுகிறது. மேலே சொன்ன மொழித்துறைகளில், முக்கியமாக இலக்கணத்திலும், தத்துவத்திலும், பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய வடமொழிகளின் ஊடாட்டம் தமிழ் மொழிக்குக் கிடைத்தது.

தமிழ்நாகரிகம் உயர்ந்த நாகரிகம் என்று நாம் பெருமைப்படலாம். இது தமிழ் முன்னோர்களின் பெருமை நம் பெருமை, இதற்கு நாம் வாரிசு என்பதே. இன்றைய தமிழ்ப் பண்பாட்டின், தமிழ்மொழியின் சாதனை என்ன என்ற கேள்விக்கு விடை இல்லை. கலை, அறிவியல்,இலக்கியம், முதலியவற்றில் இன்றைய தமிழ்ப் பண்பாட்டின், தமிழ் மொழியின் தனிப்பட்ட சாதனைகள், சிறப்பான சாதனைகள் என்று பெருமைப்பட எதுவும் இல்லை. ஆங்கிலப் பண்பாட்டின், மொழிக்கு இன்று இருக்கிறது. ஆனால் இதன் விளைவாகப் புதிய சாதனைக்ள எழக் காணோம். செய்தவை எல்லாம் ஆங்கிலப் பண்பாட்டினுடைய, மொழியினுடைய சாதனைகளி நிழலாகத்தான இருக்கின்றன. இப்படித் தமிழ் நாகரிகம் ஒடுங்கிவிட்டதற்குத் தமிழ்ப் பண்பாட்டில் ஏதாவது காரணம் இருக்கிறதா என்று பார்க்கலாம்.

பண்பாட்டைப் பற்றியும் பண்பாட்டின் சாதனமான மொழியைப் பற்றியும் தமிழர்கள் கொண்டிருக்கிற மனப்பாங்கும் கருத்துகளும் ஒரு காரணம் ஆகலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. மேலே சொன்னபடி, இரண்டைப் பற்றிய தமிழர்களின் மனப்பாங்கும் கருத்துகளும் ஒரே மாதிரியானவை. தமிழ்ப்பண்பாடு தூய்மையானது. இந்த தூய்மையைப் போற்றவேண்டும் என்ற எண்ணமும் அந்த எண்ணத்தின் விளைவான செயல்களும் மொழிக்கும் ஏற்றப்படுகின்றன. தமிழ்மொழியைத் தமிழ் பெண்ணாக உருவகிக்கும் போது அதன் கன்னித்தன்மை - இளமை, தூய்மை என்ற இரண்டு பொருளிலும் - வலியுறுத்தப்படுகிறது. கன்னித்தன்மையைக் காக்கச் சுதந்திரமான வளர்ச்சிக்குக் கட்டுப்பாடுகள் போடப்படுகின்றன. தமிழ்நாகரிகம் உயர்ந்திருந்த காலத்தில் இருந்தது போல் இன்றும் தமிழ் வீட்டு மொழியிலிருந்து நாட்டுமொழி ஆகவேண்டுமென்றால் கட்டுபாடுகள் துணை செய்யாது. வீட்டைவிட்டு நாட்டுக்கு உழைக்கச் செல்லும் பெண் புடவையிலேயே இருப்பாள் என்று எதிர்பார்க்க முடியாது.

பழைய மரபை மேற்கோள்காட்டி நெறிபடுத்தும் பண்புகளுக்கும் இன்றைய வாழ்க்கையின் நிர்பந்தங்களுக்கு ஏற்ப நடைமுறையில் கடைப்பிடிக்கும் பண்புகளுக்கும் இடையே இடைவெளி இருப்பதைப் போல மரபு இலக்கணங்களிலிருந்து மேற்கோள் காட்டி நெறிப்படுத்த முனையும் தமிழ் மொழிக்கும் இன்றைய தேவைகளை நிறைவு செய்யத் தேவையான தமிழ்மொழிக்கும் இடைவெளி இருக்கிறது. போற்றுவது ஒன்றும் பின்பற்றுவது ஒன்றுமாகப் பிற பண்பாட்டுக் கூறுகளில் இரட்டை நடத்தை இருப்பது போல, மொழியிலும் போற்றுவது தமிழ், பின்பற்றுவது ஆங்கிலம் என்ற நிலை இருக்கிறது. இந்த இரட்டை நடத்தையால் கலை, அறிவியல், இலக்கியம் ஆகிய எல்லாத் துறைகளிலும் படைப்பாற்றல் முழுமலர்ச்சி அடையவில்லை. நம் ஆளுமையை உருப்படுத்தும் நம் பண்பாட்டை, மொழியைச் சார்ந்து சாதனைகள் செய்ய மனம் இல்லை. வாய்ப்பு இல்லை. நாம் முழுமையாகத் தன்வயப்படுத்திக் கொள்ளாத இன்னொரு பண்பாட்டை, மொழியைச் சார்ந்து சாதனைகள் செய்ய இயலவில்லை. மீறிச் சிலர் செய்கிற சாதனைகளைப் பிறப்பால் தமிழர்களின் சாதனைகள் எனலாமே தவிர தமிழ்ப் பண்பாட்டின், மொழியின் சாதனைகள் என்று கூறமுடியாது.

தமிழ்ப் பண்பாட்டிடம் தமிழர்களுக்கு ஒரு பக்தி இருப்பதுபோல் தமிழ் மொழியிடமும் ஒரு பக்தி இருக்கிறது. தமிழைத் தாயாக, தெய்வமாகக் கொள்வதன் விளைவு இது . பக்தி இன்னொருபடி போய்ப் பயபக்தி ஆகிறது. பயபக்தி மொழியை நம்மிடமிருந்து தூரப்படுத்துகிறது. மேலே சொன்னபடி மரபின் அடிப்படையில் மொழிக்கு விதிக்கும் கட்டுப்பாடுகள் தூரப்படுத்துதலை உறுதிசெய்கின்றன. மொழிக்கு நாம் வணங்குவதைவிட மொழியை நமக்கு வளைக்க வேண்டும். மொழியைத் தூரத்தில் வைக்காமல் நெருக்கம் காட்ட வேண்டும். மொழியோடு தோழமை உறவுகொண்டு ஊடியும் கூடியும் அதன்மேல் ஆட்சி செலுத்தினாலே புதிய மொழி பிறக்கும். புதிய படைப்புகள் பிறக்கும். கலை, அறிவியல், இலக்கியப் படைப்புகளில் புதிய சாதனைகள் படைக்க மொழியிடம் உரிமை எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ்ப் பண்பாட்டின், மொழியின் விளைவாகப் புதிய சாதனைகள் படைக்கும் போதுதான் புதிய தமிழ் நாகரிகம் பற்றிப் பேசலாம். அதைப்பற்றிப் பெருமைபடலாம்.

[நன்றி: காலச்சுவடு]

Wednesday, March 15, 2006

நான்கெழுத்து.............

'உலகம்' நான்கெழுத்து!
உலகில் வாழுகின்ற 'மக்கள்'
நான்கெழுத்து!

வாழ்க்கையின் 'பிறப்பு' நான்கெழுத்து!
பெற்றோர் பெறும் 'குழந்தை'
நான்கெழுத்து!

பள்ளி செல்லும் 'மாணவன்' நான்கெழுத்து!
மாணவன் 'இளைஞன்' ஆவது
நான்கெழுத்து!

இளைஞர்களின் 'கல்லூரி' நான்கெழுத்து!
கல்லூரியில் பயிலும் 'படிப்பு'
நான்கெழுத்து!

படிப்பு தருகின்ற 'பட்டம்' நான்கெழுத்து!
பட்டத்தினால் கிடைக்கின்ற 'ஊதியம்'
நான்கெழுத்து!

ஊதியம் தருகின்ற 'மதிப்பு' நான்கெழுத்து!
மதிப்புடன் பெண்ணுக்குக் 'கணவன்' ஆவது
நான்கெழுத்து!

கணவன் 'தலைவன்' ஆவதும் நான்கெழுத்து!
தலைவன் முதுமையினால் 'கிழவன்' ஆவது
நான்கெழுத்து!

இறுதியில் தூக்கிச் செல்லும் 'நால்வர்' நான்கெழுத்து!
னால்வர் கொண்டு சேர்க்கும் இடம் 'சுடுகாடு'
நான்கெழுத்து!

சுடுகாடு உள்ள இடமோ 'உலகம்' என்னும் நான்கெழுத்து!

வந்தே மாதரம்

வந்தே மாதரம் என்போம் - எங்கள்

மாநிலத் தாயை வணங்குதும் என்போம்

ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்

ஜன்மமித் தேசத்தில் எய்தின ராயின்

வேதிய ரயினும் ஒன்றே - அன்றி

வேறு குலத்தின ராயினும் ஒன்றே

ஈனப் பறையர்க ளேனும் - அவர்

எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?

சீனத்த ராய்விடு வாரோ? - பிற

தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?

ஆயிரம் உண்டிங்கு ஜாதி- எனில்

அன்னியர் வந்து புகலென்ன நீதி? ஓர்

தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்

சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த

ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

எப்பதம் வாய்த்திடு மேனும் நம்மில்

யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்


முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்

முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்

புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு

போயின நாட்களுக் கினிமனம் நாணித்

தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்

தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி


-பாரதியார்

Monday, March 13, 2006

பாரதிதாசன்

கிளையினிற் பாம்பு தொங்க
விழுதென்று குரங்கு தொட்டு
விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதித்ததைப் போல
கிளைதோறும் குதித்துத் தாவிக்
கீழுள்ள விழுதைத் யெல்லம்
ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்

- பாவேந்த்ர் பாரதிதாசன்

தமிழ் மொழி (பாரதியார்)

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவ தெங்கும் காணோம்

பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழிச்சிசொலப் பான்மை கெட்டு

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!

தேமதுரத் தமிழோசை உலகம்மெலாம்
பராவும்வகை செய்தல் வேண்டும்

-தேசியக்கவி சுப்பிரமணிய பாரதியார்